Sunday, January 19, 2020

வரணி வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு..!!

தென்மராட்சி வரணி பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்திற்கான புதிய நிர்வாகம் இன்றையதினம் (19) தெரிவு செய்யப்பட்டது.

வைத்தியர் ப. அச்சுதன் தலைமையில் வைத்தியசாலை மண்டபத்தில் 10.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் முன்னைய நிர்வாகத்தினரின் அறிக்கைகளைத் தொடர்ந்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.


அந்தவகையில் புதிய நிர்வாகத்தின் தலைவராக வைத்தியர் ப. அச்சுதன் அவர்களும் உபதலைவராக ந. இராசகுமாரன் அவர்களும் செயலாளராக க. கேதீஸ்வரன் அவர்களும் உப செயலாளராக நா. சுயந்தன் அவர்களும் பொருளாளராக ச. மயூரன் அவர்களும் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் நிர்வாக உறுப்பினர்களாக செ. நவரத்தினசாமி, இ. சுதாகர், ந. ஸ்ரீரங்கநாதன், கி. தங்கேஸ்வரன், மு.சசிகாந்த், ந. சிவராஜசிங்கம், வே. செல்வகுமார், வீ . பாலசுப்பிரமணியம், ந. திருவாசகம், இ. நிறஞ்சன், க. பரமானந்தம், சி.அருணாச்சலம், க.பவளம்  ஆகியோரும் கணக்காய்வாளராக நா.கருணாகரன் மற்றும் போசகராக ம. குகதாசன் போன்றோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினர் அனைவரும் இன்றையதினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு எதிர்கால செயற்பாடுகளுக்காக தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





Wednesday, January 8, 2020

யாழ் மந்துவில் பகுதியில் வீடொன்றின் மீது வானில் வந்த கும்பல் கடும் தாக்குதல்!!!

யாழ் தென்மராட்சி மந்துவில் பகுதியில் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 8.00 மணியளவில் வானில் வந்த கும்பலால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

காணிப்பிரச்சினை காரணமாக இருந்து வந்த முறுகலே தாக்குதல் வரை சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



இக்காணிப்பிரச்சினை தொடர்பாக முன்னரே கொடிகாமம் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றயதினம் வானில் வந்த கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில் துதிமோகன் தர்சினி (வயது -31), விஸ்வலிங்கம் நாகம்மா (வயது- 70) ஆகிய இருவரும்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதில் தாக்குதலுக்குள்ளானவர்கள் அவசர அம்புலன்ஸ்  மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னரும் குறித்த கும்பல் மீண்டும் வந்து வீட்டுப் படலை மீதும், வேலிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதையறிந்த ஊர் வாசிகள் வானில் வந்த கும்பலை மடக்கிப் பிடித்து கொடிகாமம் பொலீசாரிடம் ஒப்படைத்தனர் அத்துடன் குறித்த வானும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


`

Sunday, December 29, 2019

தென்மராட்சி வரணி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஒன்றுகூடல்!!

யாழ் தென்மராட்சி வரணி மத்திய கல்லூரியில் ஒன்றுகூடல் ஒன்று நேற்றய தினம் (28) பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  10.30 மணியளவில் ஆரம்பமாகி  சிறப்பாக இடம்பெற்றது.


உயர்தரம் கற்று 2014 ம் ஆண்டு  வெளியேறிய பழைய மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பான முறையில் நடாத்தப்பட்ட ஒன்றுகூடலில் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தலைவராக ஜனகராஜ் அவர்களும் செயலாளராக சுகப்பிரியா அவர்களும் பொருளாளராக ரஜிதரன் அவர்களும் உப தலைவராக ரமேஸ் அவர்களும்  ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.



இவர்கள் பள்ளியின் வருங்கால வளர்ச்சியை கருத்திற்கொண்டு தொடர்ச்சியான செயற்பாடுகளுக்காக குறித்த அங்குரார்ப்பணம் இடம்பெற்றது எனத்  தெரியவருகிறது.



இந்நிகழ்வில் உயர்தரம் கற்று 2014 ல் வெளியேறிய தற்போது பல்வேறு துறைகளில் சாதித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














Saturday, October 26, 2019

வறுமை கரணமாக வரணிப்பகுதியில் உயிரிழந்தார் இளைஞர்!!!



தென்மராட்சி  வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் நேற்று (25) குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வலிப்பு நோயாளியான குறித்த இளைஞர் நேற்று மாலை வீட்டிற்கு முன்னால் உள்ள குளத்தில் நீர்  எடுக்க சென்ற  போது வலிப்பு ஏற்பட்டு உறுண்டு சென்று குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Image may contain: 1 person, smiling, stripes, tree and outdoor

வரணி இடைக்குறிச்சியில் வசித்துவரும் 34 வயதான  கந்தையா சுதன் என்பவரே குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞரே கூலித்தொழில் செய்து தமது குடுப்பத்தை பார்த்து வந்தார்.
மிகவும் வறுமையின்  பிடியில் நெடுங்காலமாக இருக்கும் இவர்களின் தந்தை குடும்பத்தாருடன் கோபித்துக்கொண்டு தனது சொந்த ஊரில் வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.

வறுமையின் காரணத்தால் தமது நீர் தேவைக்காக கூட  கிணறு இல்லாத நிலையில்  குளத்தில் நீர் எடுப்பதற்கு சென்றே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இவரது சகோதரர்களும் ஊனமுற்ற நிலையில்  இருப்பதும்  குறிப்பிடத்தக்கது.

Image may contain: 4 people, including Sivarajah Varany Siva, people standing

Monday, July 29, 2019

தென்மராட்சி வரணி மத்திய கல்லூரி மைதானத்திற்கான மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

தென்மராட்சி வரணி மத்திய கல்லூரியின் மைதான புனரமைப்புக்காக துரித கிராமியா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதியில் மைதானத்திற்கான  மதில் அமைக்கும் வேலைகள் இடம்பெற்று வருகிறது.

இவ்வேலைத் திட்டத்திற்காக பாராளு மன்ற உறுப்பினர்களான சிவஞ்ஞானம் ஸ்ரீதரன், 0.5 மில்லியன் ரூபாவும் எம். ஏ. சுமந்திரன் 0.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கியுள்ளனர்.

மொத்தமாக 1 மில்லியனுக்கும் மைதானத்திற்கான மதில் அமைக்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.










Friday, July 5, 2019

தென்மராட்சி வரணியில் பாடசாலைகளுக்கு பல்லூடகக் கற்கைகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

தென்மராட்சி வரணி நாவற்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள  கரம்பை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் வாணி முன்பள்ளி ஆகியவற்றிற்கு கடந்த திங்கள்கிழமை (1) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


சிவன் பவுண்டேசன் நிறுவனத்தின் ஸ்தாபகரும் மக்கள் முற்போக்கு கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமாகிய கணேஷ் வேலாயுதத்தினால் பள்ளி மாணவர்களின் கல்விச்  செயற்பாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு பல்லூடகக் கற்கைகளுக்கான உபகரணங்களும் வாணி முன்பள்ளிக்கு நவீன தொலைக்காட்சியையும் வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கணேஷ் வேலாயுதம் அவர்கள் வடமாகாணத்தில் கல்வியில் காணப்படும் ஊழல்களை இல்லாதொழித்து கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே எனது பயணத்தின் நோக்கம் எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில் பின்தங்கிய பாடசாலைகளின் கல்விச்செயற்பாட்டை உயர்த்துவதற்கு  உதவி செய்வதற்கு தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இவரின் செயற்பாட்டிற்கு பாடசாலைச் சமூகம் மற்றும் கிராம மக்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Wednesday, July 3, 2019

தென்மராட்சி வரணி ரட்ணா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது!

தென்மராட்சி வரணி ரட்ணா முன்பள்ளியின் மழலைகளுக்கான விளையாட்டு விழா நிகழ்வுகள் நேற்று முன்தினம்(1) பிற்பகல் 2.30 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன்  ஆரம்பமாகி  சிறப்பாக இடம்பெற்றன.



முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சி. பிரபாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ச. அரியநாயகம் அவர்களும், நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தியாலய அதிபர் திருமதி க. கபரியேற்பிள்ளை அவர்களும், தென்மராட்சி முன்பள்ளிகளின் இணைப்பாளர் செல்வி ற. தர்மிலா அவர்களும், மற்றும் கெளரவ விருந்தினர்களாக வரணி இயற்றாலை கிராம அலுவலர் செல்வி இ. சங்கீதா அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச. தீபராசா அவர்களும், வரணி பொது சுகாதார பரிசோதகர் நிஜன் அவர்களும், காணி அன்பளிப்பாளர் சி. தங்கராசா அவர்களும் மற்றும் வரணியின் ஏனைய முன்பள்ளி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .




இந்நிகழ்வில் சிறார்களின் விளையாட்டுக்களாக தடைதாண்டுதல், மீன் பிடித்தல், பாம்பு ஓட்டம், கயிறு இழுத்தல் போன்ற பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அத்துடன் பழையமாணவர், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டுக்கள் என்பனவும் சிறப்பான முறையில்  இடம்பெற்றன.




மேலும்  மழலைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.அத்துடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சி. பிரபாகரன் தனது நிதியில் சிறார்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.அத்துடன் முன்பள்ளிக்கு பெயர்ப்பலகையும் செய்து கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












Wednesday, June 19, 2019

கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்தார்.

இது தொடர்பான வாக்குறுதிகள் பலமுறை ரணிலால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாவை சேனாதிராசா மற்றும் ஞா.சிறிநேசன் ஆகிய இருவரிடமும் ரணில் இந்த வாக்குறுதியை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடந்த சந்திப்பின்போதே, குறித்த வாக்குறுதியை பிரதமர் ரணில் வழங்கினார்.வரும் செவ்வாய்க்கிழமையோ, அல்லது அதற்கடுத்து வரும் செவ்வாய்க்கிழமையோ அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில மாதங்களிற்கு முன்னர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க பிரதமர் தயாரானபோது, முஸ்லிம் காங்கிரஸ் அதை எதிர்த்தது.இந்நிலையில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லாத நிலையில், அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




வடக்கிலிருந்து தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை!

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிஸாரின் குறைபாட்டை நிறைவுசெய்ய வடமாகாணத்திலிருந்து இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இதற்கான நேர்முக தெரிவு நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நேர்முக தேர்வை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதற்கு முன்னைய காலங்களில் பொலிஸ் திணைக்களத்திற்கான ஆட்சேர்ப்பு நேர்முக தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்றுவந்தன.

எனினும் வடக்கு ஆளுநர், ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய நேர்முக தேர்வுகள் வடமாகாணத்திலேயே இடம்பெற்றது. மேலும் இதில் தெரிவுசெய்யப்படுகின்றவர்களுக்கு ஆரம்பகட்ட பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, June 8, 2019

தயாமாஸ்டருக்கு எதிராக பயங்கரவாதச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு! குறைக்க சட்டமா அதிபர் இணக்கம்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயாமாஸ்டருக்கு எதிரான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான  பாரதூரமான
குற்றச்சாட்டை குறைத்துக் கொள்வது தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதற்கு இணக்கம் தெரிவித்த சட்டமா அதிபர் அது தொடர்பான முடிவை மன்றுக்கு அறிவிக்க வவுனியா மேல் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

அதற்கு அமைவாக தயாமாஸ்டருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை  12 ம்  திகதி புதன்கிழமை வரை ஒத்திவைத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் உத்தரவிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார். போர் முடிவுக்கு வந்ததும் நீதிமன்றத்தினால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவில் தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தயாமாஸ்டருக்கு  எதிராக பயங்கர வாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

2009 ம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18 ம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களான இளம்பரிதி, திலக் ஆகியோருடன் இணைந்து அப்போது நடைபெற்ற  போர்  காலப் பகுதியில் புதுமாத்தளன் என்ற இடத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு
பொதுமக்களை விடுவிக்காமல் தடுத்து அவர்களை விடுதலைப் புலிகளின் தேவை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மனிதக் கேடயங்களாக்கியதன் மூலம் 2006 ம் ஆண்டின் 7 ம் இலக்க பயங்கரவாதம் மற்றும் குறித்துரைக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுத்தல் விதிகளின் கீழ் 7 (ஊ ) ஒழுங்கு விதியுடன் சேர்த்து வாசிக்கப்படக் கூடிய 11 வது ஒழுங்கு விதிகளின் கீழ் தண்டனை விதிக்கக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தயாமாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018 ம் ஆண்டு ஒக்டோபர் 19 ம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்றய தினம் (08) நியமிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் வழக்கு விளக்கத்துக்காக அழைக்கப்பட்டது.

சந்தேகநபரான தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மன்றில் முன்னிலையானார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் முன்னிலையானர். வழக்கு தொடுனர் சார்பில் பிரதி சொலிஸ்ரார் ஜெனரல் அசாத் நவாவியுடன் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார்.

வழக்கின் சாட்சிகளாக நீதிபதி ஹப்பு ஆராச்சி, சிவில் மற்றும் பொலிஸ் சாட்சிகள் அழைக்கப்பட்டிருந்தனர் அவர்கள் மன்றில் முற்பட்டனர்.

சந்தேகநபர்  மீதான குற்றச்சாட்டு பாரதூரமானது அதனால் குற்றச்சாட்டைக் குறைத்து குற்றப்பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொண்டால் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை நிறைவு செய்வதற்கான ஆலோசனையை எனது கட்சிக்காரரான சந்தேகநபருக்கு வழங்க முடியும். என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மன்றுரைத்தார்.

எதிரியின் சட்டத்தரணி முன்வைத்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து மன்றுக்கு முடிவை அறிவிக்க கால அவகாசம் தேவை என்று சொலிஸ்ரார் ஜெனரல் அசாத் நவாவி மன்றுரைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மன்று வழக்கை எதிர்வரும் ஜூலை 12 ம் திகதிக்கு நியமித்தது. அத்துடன் வழக்கு தொடுனரின் அனுமதியுடன் அழைக்கப்பட்ட 5 சாட்சிகளையும் வழக்கிலிருந்து விடுவித்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.









Thursday, June 6, 2019

திருமண நாளில் மணப்பரிசாக நண்பர்கள் வழங்கிய அற்புதமான பரிசு!!

இன்றைய தினம் (06) இல்லற வாழ்விலே இணைந்துள்ள தென்மராட்சி வரணியை சேர்ந்த  ஞானவரதன் சத்தியா தம்பதிகளுக்கு  வாழ்த்து தெரிவித்து  அவரது பள்ளி  நண்பர்கள் அனைவரும் இணைந்து மணப்பரிசாக  எமது இனத்தின் தேவையறிந்து வறுமையால் அவதிப்படுகின்ற மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளனர்.



தாயகத்திலே அன்றாட வாழ்வாதாரத்திற்காக அல்லல் படுகின்ற பலரில் ஓர்   குடும்பமாக வவுனியா மாவட்டத்தின் நகர் பகுதியிலே மிகவும் வறுமையோடு வசித்து வருகின்ற ஒரு குடும்பத்தினருக்கு அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க  அடிப்படை வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கோடு சுயதொழில் ஊக்கிவிப்பிற்கான
உதவிதிட்டம் வாழங்கப்பட்டுள்ளது.





அத்துடன் வரணி மத்திய கல்லூரியில் நீண்டதூரம் நடந்து சென்று கல்வி கற்று வருகின்ற ஓர் மாணவனிற்கான பொருளாதார அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.

 இவ் இருவேறு அன்பளிப்புக்களும் தாயகத்திலே மிகவும் அர்ப்பணிப்போடும் உண்மைத்தன்மையோடும் பல சமூக நலப்பணிகளை செயலாற்றி வருகின்ற தொண்டு நிறுவனமான " அன்பேசிவம்" நிறுவனத்தினூடாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வாறான  செயற்பாடானது மற்றவர்களுக்கும்  எடுத்துக்காட்டான  மிகவும் வரவேற்கக்கூடிய விடயமாகும்.

பல்வேறு வேதனைகளுக்கும்  இன்னல்களுக்கும்  மத்தியில் அன்றாட வாழ்க்கைக்காக அல்லல் படுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்ற அதேவேளை ஞானவரதன் சத்தியா தம்பதிகள் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி எமது வலைத்தளம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Tuesday, June 4, 2019

வீதியில் பழம் விற்ற சிறுவனைக் கண்ட அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!!

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் சந்தியில், பாடசாலை நேரத்தில், பாடசாலைக்கு செல்லாமல் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருந்த 13 வயது மாணவன், கல்வி இராஜாங்க அமைச்சரினால் இனங்காணப்பட்டு, கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிய வேளை, ஏ9 வீதி பரந்தன் சந்தியில், வீதி அருகில் சிறுவன் ஒருவன் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருப்பதை அவதானித்தார்.

அதனைத்தொடர்ந்து, உடனடியாக சிறுவனை தனது வாகனத்திற்கு அருகில் அழைத்து, சிறுவன் பாடசாலை மாணவன் என்பதை உறுதி செய்து, உடனடியாக கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாணவன் பாடசாலை செல்லாமல் பாலைப்பழம் விற்பது தொடர்பில் விளங்கப்படுத்தியதுடன், 18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள், வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதனை அனுமதிக்க வேண்டாம்; எனவும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் முகமாக, பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், மாணவன் இனிமேல் பாடசாலை நேரத்தில் இவ்வாறான வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் எனவும், மாணவனின் பெற்றோரை சந்தித்து அறிவுரை வழங்குமாறும், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த நிலையில், மாணவன் விற்பதற்காக கையில் வைத்திருந்த பாலைப்பழத்தை காசு கொடுத்து வாங்கிய அமைச்சர், அந்த மாணவனை வீடு சென்று கல்வி கற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.






Monday, May 20, 2019

சிட்டிவேரம் கண்ணகைக்கு ஆரம்பமாகியது அலங்கார உற்சவம்!

தென்மராட்சி வரணி அருள்மிகு சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத்  திருவிழா  இன்றைய தினம் (20) பொங்கல் விழாவுடன்  சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

பொங்கல் விழாவான 1ம் திருவிழாவிலிருந்து 12 ம் திருவிழா வரை காலைப்பூஜை  காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 8 மணிக்கு அபிஷேக சங்கற்பமும் காலை 10 மணிக்கு மூலஸ்தானப்பூஜையும் காலை 10.30 மணிக்கு வசந்த மண்டபப்  பூஜையுடன் கண்ணகைத்  தாய் மேள தாளங்களுடன்  வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மதியம் 12 மணிக்கு இருப்பிடத்தை அடைவார்.


மாலை, மூலஸ்தானப்பூஜை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையுடன் கண்ணகை அம்பாள் வெளி வீதியுலா வலம் வந்து திருவருள் பாலித்து மாலை 6 மணிக்கு இருப்பிடத்தை அடைவார்.



15 திருவிழாக்களில் 12 சப்பைரதத் திருவிழாவும்  13 தேர்த்திருவிழாவும் 14 தீர்த்தத் திருவிழாவும் சிறப்புற நடைபெறவுள்ளன.  அத்துடன் 15 பட்டுத் தீர்த்தத்துடன் திருவிழாக்கள் அனைத்தும் நிறைவு பெறும்.








Saturday, May 18, 2019

சிறுமியைக் காணவில்லை! தகவல் தெரிந்தவர்கள் கொடிகாமம் பொலிசாருக்கு தெரிவியுங்கள்!

தென்மராட்சி வரணி கரம்பைக்குறிச்சி மேற்கில்  வசிக்கும் சிவபாதசுந்தரம் நந்தினி என்பவர் மூலம் தனது மகளாகிய 15 வயதும் 8 மாதமும் உடைய சிவபாத சுந்தரம் தனிஜா என்பவர் காணாமல் போனது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இம்முறைப்பாட்டிற்கமைய சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் பாதிக்கப்பட்ட சிறுமி , மற்றும்  குறித்த சிறுமியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான  கமலேஸ்வரன் துஸ்யந்தன் என்பவர் கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருவரும்  நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

மன்றில் முற்படுத்திய பின்னர் குறித்த சிறுமி திண்ணைவேலி முத்துத்தம்பி சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து கடந்த  18.03.2019 அன்று அனுமதியின்றி வெளியேறியுள்ளார்.

இந்த சிறுமி தொடர்பான தகவல் கிடைத்தால் கொடிகாமம் பொலிசாருக்கு (0212050222) தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.












Saturday, May 11, 2019

கலா அக்காவின் கதையை கவனித்திருந்தால் பாதுகாப்பு பிரச்சினையே வந்திருக்காது.

பாதுகாப்பு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை அரசு கவனத்தில் எடுத்திருந்தால் இன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

2018ஆண்டு ஜூலை 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரச வைபவத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக – இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தண்டனைச் சட்டக்கோவை 120 பிரிவின்படி தண்டனை வழங்கக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளார் எனப் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று அழைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது சமர்ப்பணத்தில்,

“2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற அரச வைபவத்தில் நாட்டின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் முன்னிலையில் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரையில், வடக்கில் சட்டம், ஒழுங்கு சீராகச் செயல்படுத்தப்படாமையால் பல கொலை, கொள்ளைகள் நடைபெறுவதுடன் 5 வயதுச் சிறுமி கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தைப் போன்ற நிர்வாகம் இருந்திருந்தால் இவ்வாறான குற்றச் செயல்கள் நடைபெறமாட்டாது என்பதையுமே குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உரையின் உள்ளடக்கத்தைக் கவனத்தில் எடுத்து பாதுகாப்பு அமைச்சு முறையாகச் செயல்பட்டிருக்குமானால் இன்றைய நாட்டின் நெருக்கடி சூழ்நிலை அனர்த்தங்களைக் கூடத் தடுத்திருக்கலாம்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதா?அல்லது விடுதலை செய்வதா? என்பதைத் தீர்மானிக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இந்த வழக்கின் கோவைகள் அனுப்பப்பட்டுள்ளன. சட்டமா அதிபரைத் தொடர்புகொண்டு இந்த வழக்குக்கோவை சம்பந்தமாக உரையாடியுள்ளோம்” – என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவதற்காக இந்த வழக்கு ஜூலை 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.