Saturday, May 11, 2019

கலா அக்காவின் கதையை கவனித்திருந்தால் பாதுகாப்பு பிரச்சினையே வந்திருக்காது.

பாதுகாப்பு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை அரசு கவனத்தில் எடுத்திருந்தால் இன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

2018ஆண்டு ஜூலை 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரச வைபவத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக – இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தண்டனைச் சட்டக்கோவை 120 பிரிவின்படி தண்டனை வழங்கக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளார் எனப் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று அழைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது சமர்ப்பணத்தில்,

“2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற அரச வைபவத்தில் நாட்டின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் முன்னிலையில் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரையில், வடக்கில் சட்டம், ஒழுங்கு சீராகச் செயல்படுத்தப்படாமையால் பல கொலை, கொள்ளைகள் நடைபெறுவதுடன் 5 வயதுச் சிறுமி கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தைப் போன்ற நிர்வாகம் இருந்திருந்தால் இவ்வாறான குற்றச் செயல்கள் நடைபெறமாட்டாது என்பதையுமே குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உரையின் உள்ளடக்கத்தைக் கவனத்தில் எடுத்து பாதுகாப்பு அமைச்சு முறையாகச் செயல்பட்டிருக்குமானால் இன்றைய நாட்டின் நெருக்கடி சூழ்நிலை அனர்த்தங்களைக் கூடத் தடுத்திருக்கலாம்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதா?அல்லது விடுதலை செய்வதா? என்பதைத் தீர்மானிக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இந்த வழக்கின் கோவைகள் அனுப்பப்பட்டுள்ளன. சட்டமா அதிபரைத் தொடர்புகொண்டு இந்த வழக்குக்கோவை சம்பந்தமாக உரையாடியுள்ளோம்” – என்று தெரிவித்தார்.

இதனையடுத்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவதற்காக இந்த வழக்கு ஜூலை 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.




No comments: