Thursday, April 18, 2019

கடந்த 5 நாட்களில் 42 பேர் விபத்தினால் உயிரிழப்பு - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

ஏப்ரல் 13ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் மொத்தமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மேலும், இந்தக் காலப்பகுதியில் ஒழுங்கு விதிகளை மீறி வாகனத்தை செலுத்திய சாரதிகளுக்கு எதிராக 42 ஆயிரத்து 114 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கொழும்பில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்; “ஏப்ரல் 13ஆம் திகதிமுதல் ஏப்ரல் 17ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இலங்கையில் 31 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் மொத்தமாக,மஹியங்கனை விபத்தில் உயிரிழந்தவர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், குறைவான எண்ணிக்கையாக கருதப்பட்டாலும், இதனையிட்டு நாம் திருப்தியடைய முடியாது. புத்தாண்டு காலங்களிலேயே கூடுதலாக விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

நாம் உரிய அவதானத்துடன் வாகனங்களை செலுத்தினால், இந்த 42 உயிரிழப்புக்களையும் தவிர்த்திருக்கலாம். எனவே, உரிய ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துமாறு நாம் சாரதிகளிடம் கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments: