Tuesday, January 29, 2019

யுத்தத்திற்கு தயாராகும் இலங்கை முப்படைகள்

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு நிகரான யுத்தம் ஒன்றை போதைப்பொருள் கடத்தல்கார்களிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்காக முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கான தலைமைத்துவத்தை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய காவற்துறை அதிகாரிகளை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களினால் காவற்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கி அனுப்பி வைத்த யுகத்திற்கு தான் முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி என்ற வகையிலும் காவற்துறையினருக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக கடமையாற்றும் அதிகாரிகளை பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊழல் மற்றும் கடத்தல்காரர்களின் கட்டளையின் பேரில் எந்தவொரு காவற்துறை அதிகாரியும் இடமாற்றத்திற்குள்ளானால் அல்லது ஏதேனும் சவால்களுக்கு அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் அதுபற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்துவதற்கு தேவையான முறைமையை வகுத்து விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று போதைப்பொருளை பயன்படுத்துகின்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் அதிகார சபை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்து புதிய அமைச்சரவை பத்திரமொன்றை நாளைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த அதிகார சபை பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments: